Super 8 (2011)

Super 8 mm - அறுபதுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு படச் சுருள் வகை . அப்போதைய குறும்பட ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது இப்படச்சுருள் வகை. இன்று வரை Super 8 சுருளில் எடுக்கப்பட்ட படங்களுக்காக தனி விழாக்கள் இருக்கின்றன.ஸ்பீல்பெர்க் கூட சிறு வயதில் Super 8 படங்கள் எடுத்து தன் சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் தான்.

1970களில் பள்ளி விடுமுறை நாட்களில் Super 8 கேமராவைக்கொண்டு காவியம் படைக்க நினைக்கும் சிறுவர்களை சுற்றி நிகழும் சம்பவங்களைப் பற்றிய படம் Super 8. அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தின் ஒரு சிறிய ஊரில் வசிக்கும் ஜோ என்னும் சிறுவன், தன் தாயின் இழப்பிலிருந்து மனதை திசை திருப்ப, நண்பன் சார்ல்ஸ் எடுத்துக்கொண்டிருக்கும்
திகில் குறும்படத்தில் மேக்-அப் மேனாக ஈடுபடுகிறான்.சார்லஸ்,தன் திரைக்கதையில் ஒரு கதாநாயகி பாத்திரத்தை நுழைத்து அந்த வேடத்திற்கு பள்ளியில் உடன் படிக்கும் ஆலிஸையும் நடிக்க சம்மதிக்க வைத்துவிடுகிறான். திட்டமிட்டபடி ஜோ, சார்லஸ், ஆலிஸ் மற்றும் அவர்களின் நண்பர்கள் அந்த ஊரின் சிறு இரயில் நிலையத்தில் படம் எடுத்துக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக அங்கு நடக்கும் ஒரு பெரும் இரயில் விபத்தை கேமராவில் பதிவு செய்ய நேர்கிறது.

விபத்திற்க்குப் பிறகு அந்த ஊரில் சில விசித்திரமான சம்பவங்கள்  நிகழ ஆரம்பிக்கின்றன.அன்றிரவே அங்கு வந்து குவியும் அமெரிக்க விமானப்படையின் செயல்பாடுகளும் மர்மமாகவே இருக்கிறது. திடீரென்று சிலர் காணாமல் போக ஆரம்பிக்கிறார்கள்.ஆலிசும் அவள் அப்பா கண்முன்னாலேயே காணாமல் போகிறாள்.துணை ஷெரிஃப் ஆக பணிபுரியும் ஜோவின் அப்பா ஜாக்சன், விமானப் படையின் செயல்களைப்பற்றி துருவ
ஆரம்பிக்க,அவர்களால் சிறை வைக்கப்படுகிறார்.விமானப்படை உத்தரவால் மக்கள் ஊரைக் காலி செய்ய, சார்லசின் கேமராவில் பதிவான இரயில் விபத்துக்காட்சியை பார்த்து மர்ம நிகழ்வுகளுக்கான காரணத்தை ஊகிக்கிறார்கள் சிறுவர்கள்.  காணாமல் போன ஆலிஸை கண்டுபிடிக்க ஊருக்குள் மீண்டும் நுழையும் ஜோவும் நண்பர்களும், நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களின் பின்னணியையும் இந்த தீடீர் அமானுஷ்ய நிகழ்வுகளுக்கும் விமானப்படைக்கும் உள்ள தொடர்பையும் கண்டுபிடிக்கிறார்கள். அப்போது
விமானப்படைத்தளபதியிடம் சிக்கிக்கொள்ள,அவர்களிடமிருந்து தப்பி எப்படி பிரச்சினையை தீர்க்கிறார்கள் என்பதே கதை.


குடும்பத்தில் ஏற்ப்பட்ட இழப்பை எதிர்கொள்ள முடியாமல் விரிசலடையும் ஜோவுக்கும்,ஜாக்ஸனுக்குமான் உறவு,ஜோவுக்கும் ஆலிஸுக்கும் இடையில் துளிர்க்கும் மெல்லிய காதல் என உயிரோட்டமான பின்னணியில் கொஞ்சம் அதிரடியான படமாக எடுத்திருக்கிறார்கள்.போகப்போக நிறைய செண்டிமெண்ட் கலந்து சராசரி தமிழ் மசாலாவாக ஆவது கொடுமை.அதிலும் படத்தின் முடிவில் கொஞ்சம் ஓவர் டோஸாகவே. அருமையான முதல் பாதிக்காக பொறுத்தருள்வோமாக.

சிறுவர்கள் அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.எல்லாரும் மானாட மயிலாடவில் கலந்து கொள்ளலாம். அவ்வளவு நல்ல கெமிஸ்ட்ரி. அதிலும் ’புரொடக்‌ஷன் வேல்யூ’ போன்ற சினிமா மொழி ஜல்லிகளாக அடித்துத் தள்ளும் சார்லஸ் சுவாரசியமான கதாப்பத்திரம். ஹாலிவுட்டில் மட்டும் எப்படி இப்படி நடிகர்களை பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு சிறுவனின் கதாப்பாத்திரமும் நேர்த்தி.

மற்ற டெக்னிக்கல் விஷயங்களெல்லாம் எதிர்பார்த்த மாதிரியே சிறப்பு. இரயில் விபத்து காட்சிக்காகவே இன்னும் ஒன்றிரண்டு முறை பார்க்கலாம். அந்த காட்சியை திரையரங்கில் பார்த்தால் மட்டுமே அதன் பிரம்மாண்டத்தை உணர முடியும்.அருமையாக படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தின் இயக்குநர் மிஷன் இம்பாசிபிள் 3, ஸ்டார் டிரெக் போன்ற ஹிட் படங்களைக் கொடுத்த ஜே.ஜே.ஆப்ரம்ஸ். புகழ்பெற்ற (என்னளவில் மகா திராபையான) லாஸ்ட் தொலைக்காட்சித்தொடர் மற்றும் கிளோவர்ஃபீல்ட் படத்தின் தயாரிப்பளரும் இவரே. இப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்பீல்பெர்க். இருவருமே சிறு வயதில் Super 8 படங்கள் எடுத்து சினிமா கற்றுக்கொண்டவர்கள். ஸ்பீல்பெர்க்கின் தீவிர இரசிகரான ஆப்ரம்ஸ், ஸ்பீல்பெர்க் படங்களின் காட்சிகளை படம் நெடுக பயன்படுத்தியிருக்கிறார். படம் முடிந்த உடன் கிரெடிட்ஸையும் கண்டிப்பாக பார்க்கவேண்டும். சிறுவர்களின் குறும்படம் கிரெடிட்சின் போது வருகிறது. படத்தின்  கொஞ்சம் அதிகப்படியான செண்டிமெண்ட்டை தவிர்த்துப் பார்த்தால் நல்ல பொழுதுபோக்குப் படம். கண்டிப்பாக ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம்.


அந்த நாள் (1954)


எப்போதோ சிறு வயதில் பார்த்த படங்கள் சில, மனதில் தங்கிவிடும். முழுப்படமும் நினைவில் இல்லாவிட்டலும் சில காட்சிகள் அப்படியே நினைவில் இருக்கும். அப்படி என் நினைவில் தங்கிய படம், சன் டிவியிலோ டிடியிலோ பல வருடங்களுக்கு முன் பார்த்த ’அந்த நாள்’. இப்போது பர்ர்க்க முடிந்த போது இன்னும் அதிக பிரமிப்பை ஏற்படுத்தியது. ‘ரஷமோன்’ படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த வகையில் கதை சொல்பவன் நம்பகத்தன்மை அற்றவன் என்ற உத்தியை மட்டும் பயன்படுத்திக்கொண்டு மிகச் சிறப்பாக,ஸ்டைலாக படமாக்கியிருக்கிறார்கள். எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், பண்டரிபாய்,ஜாவர் சீதாராமன் முதலானோர் நடிப்பில் 1954 இல் வெளிவந்திருக்கிறது.

இரண்டாம் உலகப்போரின் போது சென்னையை ஜப்பான் இராணுவம் தாக்குகிறது.இந்தப் பிண்ணனியில் நடக்கும் ஒரு கொலையை காவல்துறை துப்பறிவதே கதை.முதல் காட்சியிலேயே ராஜன் (சிவாஜி கணேசன்) சுடப்பட்டு சுருண்டு விழ,சுடுபவர் கோணத்திலிருந்து நாம் பார்க்க,துப்பாக்கி சத்தத்தைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் பதறிப்போய் போலீசைத் தேடி அறக்க பறக்க ஓட,மிக சுவாரசியமாக துவங்குகிறது படம். கொலையை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி, ரேடியோ இஞ்சினியர் ராஜனின் மனைவி  உஷாவிடம் (பண்டரிபாய்) விசாரணை செய்துவிட்டு, குண்டுவீச்சின் களேபரத்தில் நடந்த ஒரு சராசரி குற்றம் தான் என்று வழக்கை முடிக்க நினைக்கிறார்.

முக்காப்பேண்டும் கோட்டு தொப்பியுமாக வலம் வரும் சிஐடி சிவானந்தமோ இது சாதாரண வழக்கில்லை என்று உணர்ந்து ராஜனை தெரிந்தவர்களான உஷா,தம்பி பட்டாபி,பட்டாபியின் மனைவி ஹேமா, ராஜனுடன் தொடர்புடைய  நாட்டியக்காரி அம்புஜம், பக்கத்து வீட்டுக்காரர் சின்னையா ஆகிய எல்லோரிடமும் விசாரிக்கிறார். ஒவ்வொருவரும் மற்ற ஒருவருக்கு ராஜனை கொலை செய்யும் நோக்கம் இருப்பதற்கான சம்பவத்தை சொல்கிறார்கள்.கண்டிப்பாக இவர்தான் கொன்றிருப்பார் என்று சந்தேகிப்பதுடன், கொலை எப்படி நடந்திருக்கலாம் என்றும் வர்ணிக்கிறார்கள். இந்த வர்ணனைகள் எந்த அளவு உண்மை என்று ஆராய்ந்து, கொலை நடந்த இடத்தில கிடைக்கும் தடயங்கள் உதவியுடன் யார் கொலை செய்திருப்பார் என்று சிஐடி சிவானந்தம் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது...அவ்வளவு முக்கியமில்லை.கொலைக்கான நோக்கம்,கொலையை சுற்றி அமைந்த சம்பவங்கள் அதைவிட இவற்றை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் இவைதான் சிறப்பு.ஒவ்வொருவர் விவரிக்கும் சம்பவங்கள் மூலமாக ராஜன் கதாப்பாத்திரத்தின் இயல்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுகிறது. கடைசியில் கொலை செய்யபடுமளவிற்கு என்ன செய்திருப்பார் என்று தெரியும்போது மேலோட்டமாக ஒரு சராசரி சம்பவமாக தோன்றும் ஒன்று, உண்மையில் எவ்வளவு முக்கியமான நிகழ்வாக இருந்திருக்கக் கூடும் என்று புலனாகிறது.
எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.குறிப்பாக சின்னையாவாக நடித்திருக்கும் பி.டி.சம்பந்தம் நன்றாக நடித்திருக்கிறார்.எல்லோரையும் தூக்கி சாப்பிடுவது வழக்கம்போல் சிவாஜி.கடைசி காட்சிகளில் எப்போதும் போல் அசர வைக்கிறார். ’பொய்,பித்தலாட்டம்..’ என்று தொடங்கும் வசனத்தை சிவாஜி பேசும் பாணி...ஒன்றும் சொல்வதற்கில்லை,நடிகன்!

தோய்வே இல்லாத விறுவிறுப்பான திரைக்கதை.படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை. பத்து பதினைந்து பாடல்களும் வைக்கும் காலத்தில் தைரியமாக பாடல்களே இல்லாமல் எடுத்திருக்கிறார்கள்.பிண்ணனி இசை ஒரளவு நன்றாகவே இருக்கிறது.காட்சியமைப்புகள் மற்றும் கேமரா கோணங்கள் இப்போது கூட புதுமைதான், படம் வந்த காலத்தில் புரட்சியாக கூட இருந்திருக்கலாம்.இப்போது கம்ப்யூட்டர் கேம்களில் அதிகம் காணப்படும் ஃபர்ஸ்ட் பர்சன் பாயிண்ட் ஆஃப் வியு கோணத்தில் பல காட்சிகள் முயற்சித்திருக்கிறார்கள்.ஒரு காட்சியில் கையில் சிகரெட்டும் உதடுகளிலிருந்து புகையுமாக சிவாஜி நிற்பதை சில்ஹவுட்டில் அருமையாக காட்சிப்படுத்திருப்பார்கள்.படம் நெடுக இப்படி பல புது முயற்சிகள்.படத்தின் காலத்தை கருத்தில் கொண்டால், இந்த முயற்சிகளெல்லாம் பிரமிக்க வைக்கின்றன.

பண்டரிபாயை முதல் முதலாக சிவாஜி சந்திக்கும் மாணவர் கூட்டம்,மாட்டு வண்டி மேல் சைக்கிள் மோதிய ’விபத்தை’ பைசல் பண்ண காவல் நிலையம் வரை செல்வது என்று 50களின் இயல்புகள் சுவாரசியம்.ஒவ்வோரு காட்சியாக சிலாகிக்க வேண்டுமென்றால், படம் முழுக்க பாராட்டிக்கொண்டிருக்கலாம். படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. அங்கங்கே லாஜிக் ஓட்டைகள், துப்பறியும் கதைகளுக்கே உரிய கொஞ்சம் செயற்கைத்தன்மை எல்லாம் இருக்கின்றன். இருந்தும் ஐம்பதுகளில் பாடல்களே இல்லாமல், இரண்டு மணி நேரப்படம் எடுத்திருக்கிறார்கள் என்பது கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய முயற்சி.எல்லாரும் பார்த்து இரசிக்கூடிய, சினிமா இரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.