The Adventures of Tintin (2011)


டின்டின்னின் சாகசங்கள் - பத்திரிகை நிருபராக வேலை பார்க்கும் டின்டின்னின் அனுபவங்களை நகைச்சுவையுடன் சொல்லும்,உலக அளவில் மிகப் புகழ்பெற்ற பெல்ஜிய காமிக்ஸ் புத்தகங்கள். ஸ்னொயி,கேப்டன் ஹேட்டாக்,விஞ்ஞானி கால்குலஸ், தாம்சன் மற்றும் தாம்ப்சன் போன்ற கதாப்பாத்திரங்களைக்கொண்டு டின்டின்னின் சாகசங்களை செம ரகளையாக சொல்லியிருப்பார்கள்.சிறுவயதில் இரவலாக டின்டின் காமிக்ஸ் படிக்கக் கிடைத்து பின் டின்டின்னின் தீவிர ரசிகன் ஆனேன்.சிறு வயதில் வாசிக்கும்போது நிஜமாகவே விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். வேலைக்குச் சேர்ந்த பின் எல்லா டின்டின் புத்தகங்களையும் வாங்கிவிட வேண்டும் என்று முடிவேடுத்து முதலில் இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். இப்போது வாசித்தால், இதற்கா அப்படி சிரித்தோம் என்று இருந்தது.அதோடு டின்டின் புத்தகங்களை நிறுத்தியாச்சு. 

இருந்தும் டின்டின் கதாப்பத்திரத்தின் மீது ஒரு வித ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது .அதுவும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்க மற்றுமொரு கில்லி பீட்டர் ஜாக்சன் தயாரிக்க முதல்முறையாக லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக வெளிவரும்போது பார்க்காமல் இருக்க முடியுமா. திங்கட் கிழமை காலைக்காட்சிக்கு யார் வரப்போகிறார்கள் என்று பொறுமையாகச் சென்றால்,பெரும் கூட்டம்.பெங்களூரின் பொடுசுகள் எல்லாம் திரையரங்கில் தான் இருந்திருக்கும் போல.தமிழ் சினிமாவில் விபத்துக்குள்ளான் நபரை ஹீரோ மருத்துவமனையில் கொண்டு போய் சேர்ப்பது போல், நான் சென்ற நேரத்திற்கு ஐந்து நிமிடங்கள் தாமதமாக போயிருந்தால் டிக்கெட் கொடுப்பவர் மூக்குக்கண்ணாடியை கழட்டி கண்ணை துடைத்துக்கொண்டு கைவிரித்திருப்பார். நல்லவேளை பெரும் நெருக்கடி தவிர்க்கப்பட்டது.

சரி படத்துக்கு வருவோம்.படத்தின் முதல் காட்சியிலேயே கதை தொடங்கி விடுகிறது.கடைவீதியில் யுனிகார்ன் என்னும் சிறப்புவாய்ந்த கப்பலின் மாடலை டின்டின் எதேச்சையாக வாங்குகிறான்.வாங்கிய அடுத்த நிமிடத்திலேயே இரண்டு பேர் எவ்வளவு வேண்டுமானலும் விலை கொடுத்து அதை அவனிடம் இருந்து வாங்க முற்படுகிறார்கள்.அவர்களில் ஒருவன் சாக்கரின்.கப்பல் மாடலை விற்க மறுக்கும் டின்டினுக்கு இதில் ஏதோ மர்மம் இருப்பதாக தோன்றுகிறது.தொடர்ந்து கப்பல் மாடலை அடைந்தே தீர வேண்டும் என்று சாக்கரின் சதி வேலைகளில் ஈடுபட,மாடல் கப்பலில் இருக்கும் இரகசியத்தை டின்டின் கண்டுபிடிக்கிறான்.அதிலிருந்து ஒரு சுவரசியமான புதையல் வேட்டை தொடங்குகிறது.கப்பல் குறித்த இரகசியத்துக்காக சாக்கரினால் ஒரு கப்பலில் சிறைவைக்கப்படுகிறான் டின்டின்.அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கும் போது,எப்போதும் மப்பிலேயே இருக்கும் கேப்டன் ஹேட்டாக்கை சந்திக்கிறான்.அதன் பிறகு சரவேடியாக கதை நகர்கிறது.சாக்கரினின் நோக்கத்தை ஊகித்து,ஸ்னோயி மற்றும் ஹேட்டாக் உதவியுடன் டின்டின் எப்படி அவன் சதியை முறியடிக்கிறான்
என்பதைத தவறாமல் வெள்ளித்திரையில் காண்க. 



ஸ்பீல்பெர்க் கண்டிப்பாக ரொம்ப இரசித்து அனுபவித்து இயக்கி இருக்கிறார்.படத்தில் அப்படி ஒரு துள்ளல்.கதாப்பத்திரங்களை இயன்ற அளவிற்கு புத்தகத்தில் இருப்பது போலவே உருவாக்கியிருக்கிறார்கள். புத்தகத்தின் தனித்தன்மையான நகைச்சுவையும் படத்தில் சிறப்பாக அமைந்திருக்கிறது.டின்டின்,ஸ்னொயி மற்றும் ஹேட்டாக் கதாபாத்திரங்களை அழகாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அடுத்தடுத்த பாகங்களுக்கு நல்ல அடித்தளம்.ஆக்‌ஷன் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன.அதுவும் படத்தின் கடைசிக்கு கொஞ்சம் முன்னால் வரும் சேசிங் காட்சி அற்புதம்.இப்படி கண்கள் விரிய ஒரு ஆக்‌ஷன் காட்சியை இரசித்துப் பார்த்து வெகுநாளாகிறது.அதன் பிறகு படம் முடியும் காட்சிகள் கொஞ்சம் திராபைதான்.

படத்தின் சிறப்பு, நிச்சயமாக பெர்பாமன்ஸ் கேப்சர் தொழில்நுட்பம் தான். காமிக் புத்தகங்களை படமாக எடுப்பதில் மிகப்பெரிய சவால், கதாப்பாத்திரங்களின் உருவம்,சூழல் மற்றும் இன்ன பிறவைகளும் புத்தகத்தில் இருப்பதைப்போலவே இருந்தாக வேண்டும். அதுவும் டின்டின் போன்ற காமிக்குகளை வழக்கமான சினிமாவாக எடுத்தால் ஏமாற்றமளிக்கும் விதமாகவே இருந்திருக்கும்.நீல நிற ஸ்வெட்டர் போட்ட வட்ட முகமுள்ள இளைஞனை கதாநாயகனாக யோசித்துப் பார்த்தாலே பயமாக இருக்கிறது.லைவ் ஆக்‌ஷன் தொழில்நுட்பம் இந்த காமிக்குகளை எடுப்பதற்கு கச்சிதமாக பொருந்துகிறது. புத்தகத்தில் வரையப்பட்டது போலவே சினிமாவில் காட்சிப்படுத்த முடிகிற அதே வேளையில் நடிகர்களைக்கொண்டு ஒரு கதையை சொல்லும்போது கிடைக்கும் உயிர்ப்பும் இந்த தொழில்நுட்பத்தால் சாத்தியப்படுகிறது.

பெர்பாமன்ஸ் கேப்சர் உத்தியை ஸ்பீல்பெர்க் பயன்படுத்துவது இதுவே முதல்முறை.இதில் கண்டிப்பாக பீட்டர் ஜாக்சனின் பங்களிப்பும் மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும்.கேப்டன் ஹேட்டாக்காக் நடித்திருக்கும் ஆண்டி செர்கிஸ்,பெர்பாமன்ஸ் கேப்சர் முறையில் நடிப்பதில் மிகச் சிறந்தவர்.இந்த வருடம் வெளியான் பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் படத்தில் சீசர் என்னும் குரங்காக பெர்பாமன்ஸ் கேப்சர் முறையில் நடித்தற்காக,செர்கிஸ் துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப் படலாம் என பேச்சு
அடிபடுகிறது.டின்டின்னிலும் கேப்டன் ஹேட்டாக்காக அருமையாக நடித்திருக்கிறார்.டின்டின்னை விட ஹேட்டாக்கே பெரும்பாலான இரசிகர்களுக்கு மிகப் பிடித்த கதாபாத்திரம்.அதற்கு செர்கிஸ் அற்புதமான தேர்வு.


படத்தில் 3டி அனிமேஷனும் அருமையாக செய்திருக்கிறார்கள்.டின்டின்னின் நாய்க்குட்டி ஸ்னொயி முழுக்க அனிமேஷன் செய்யப்பட்ட கதாப்பாத்திரம்.மற்ற நடிகர்களுடன் ஸ்னொயியை பார்க்கும்போது அனிமேஷன் என்று பிரித்து உணரமுடியாதபடி இருக்கின்றது.எவ்வளவு சிறப்பாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருந்தாலும் சொல்லப்படும் கதையில் சுவாரசியம் இல்லாமல் போயிருந்தால் அத்தனையும் வீணாகியிருக்கும்.அந்த வகையில் படம் பட்டாசு.நன்றாக இரசித்து பிரமித்து பார்க்கலாம்.

பி.கு: வழக்கம்போல் 3டி எரிச்சல்தான்.சாதாரணமான காட்சிகளே இருட்டாகத்தெரியும், இந்த படத்தில் கடைசி  கால்மணி நேரம் இரவில் நடக்கின்றது.சுத்தம்.எங்கே என்ன நடக்கின்றது என்றே சில நிமிடங்கள் புரியவில்லை.இப்படிப்பட்ட அருமையான படத்தை முழுமையாக இரசித்து பார்ப்பதற்கு ஏதுவாகாத இந்த மொக்கையான தொழில்நுட்பத்தை ஹாலிவுட்காரர்கள் சீக்கிரம் விட்டொழித்தால் பரவாயில்லை. அவதார் தவிர வேறு எந்த படமும் 3டி யில் நன்றாக இருந்ததே இல்லை. பின் எதற்கு அதை இன்னும் கட்டிக் கொண்டு அழுகிறார்கள் என்றே தெரியவில்லை.பெங்களூரில் பெரும்பாலான திரையரங்குகளில் 3டி காட்சிகள் மட்டுமே இருந்து தொலைக்கின்றது.

Super 8 (2011)

Super 8 mm - அறுபதுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு படச் சுருள் வகை . அப்போதைய குறும்பட ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது இப்படச்சுருள் வகை. இன்று வரை Super 8 சுருளில் எடுக்கப்பட்ட படங்களுக்காக தனி விழாக்கள் இருக்கின்றன.ஸ்பீல்பெர்க் கூட சிறு வயதில் Super 8 படங்கள் எடுத்து தன் சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் தான்.

1970களில் பள்ளி விடுமுறை நாட்களில் Super 8 கேமராவைக்கொண்டு காவியம் படைக்க நினைக்கும் சிறுவர்களை சுற்றி நிகழும் சம்பவங்களைப் பற்றிய படம் Super 8. அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தின் ஒரு சிறிய ஊரில் வசிக்கும் ஜோ என்னும் சிறுவன், தன் தாயின் இழப்பிலிருந்து மனதை திசை திருப்ப, நண்பன் சார்ல்ஸ் எடுத்துக்கொண்டிருக்கும்
திகில் குறும்படத்தில் மேக்-அப் மேனாக ஈடுபடுகிறான்.சார்லஸ்,தன் திரைக்கதையில் ஒரு கதாநாயகி பாத்திரத்தை நுழைத்து அந்த வேடத்திற்கு பள்ளியில் உடன் படிக்கும் ஆலிஸையும் நடிக்க சம்மதிக்க வைத்துவிடுகிறான். திட்டமிட்டபடி ஜோ, சார்லஸ், ஆலிஸ் மற்றும் அவர்களின் நண்பர்கள் அந்த ஊரின் சிறு இரயில் நிலையத்தில் படம் எடுத்துக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக அங்கு நடக்கும் ஒரு பெரும் இரயில் விபத்தை கேமராவில் பதிவு செய்ய நேர்கிறது.

விபத்திற்க்குப் பிறகு அந்த ஊரில் சில விசித்திரமான சம்பவங்கள்  நிகழ ஆரம்பிக்கின்றன.அன்றிரவே அங்கு வந்து குவியும் அமெரிக்க விமானப்படையின் செயல்பாடுகளும் மர்மமாகவே இருக்கிறது. திடீரென்று சிலர் காணாமல் போக ஆரம்பிக்கிறார்கள்.ஆலிசும் அவள் அப்பா கண்முன்னாலேயே காணாமல் போகிறாள்.துணை ஷெரிஃப் ஆக பணிபுரியும் ஜோவின் அப்பா ஜாக்சன், விமானப் படையின் செயல்களைப்பற்றி துருவ
ஆரம்பிக்க,அவர்களால் சிறை வைக்கப்படுகிறார்.விமானப்படை உத்தரவால் மக்கள் ஊரைக் காலி செய்ய, சார்லசின் கேமராவில் பதிவான இரயில் விபத்துக்காட்சியை பார்த்து மர்ம நிகழ்வுகளுக்கான காரணத்தை ஊகிக்கிறார்கள் சிறுவர்கள்.  காணாமல் போன ஆலிஸை கண்டுபிடிக்க ஊருக்குள் மீண்டும் நுழையும் ஜோவும் நண்பர்களும், நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களின் பின்னணியையும் இந்த தீடீர் அமானுஷ்ய நிகழ்வுகளுக்கும் விமானப்படைக்கும் உள்ள தொடர்பையும் கண்டுபிடிக்கிறார்கள். அப்போது
விமானப்படைத்தளபதியிடம் சிக்கிக்கொள்ள,அவர்களிடமிருந்து தப்பி எப்படி பிரச்சினையை தீர்க்கிறார்கள் என்பதே கதை.


குடும்பத்தில் ஏற்ப்பட்ட இழப்பை எதிர்கொள்ள முடியாமல் விரிசலடையும் ஜோவுக்கும்,ஜாக்ஸனுக்குமான் உறவு,ஜோவுக்கும் ஆலிஸுக்கும் இடையில் துளிர்க்கும் மெல்லிய காதல் என உயிரோட்டமான பின்னணியில் கொஞ்சம் அதிரடியான படமாக எடுத்திருக்கிறார்கள்.போகப்போக நிறைய செண்டிமெண்ட் கலந்து சராசரி தமிழ் மசாலாவாக ஆவது கொடுமை.அதிலும் படத்தின் முடிவில் கொஞ்சம் ஓவர் டோஸாகவே. அருமையான முதல் பாதிக்காக பொறுத்தருள்வோமாக.

சிறுவர்கள் அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.எல்லாரும் மானாட மயிலாடவில் கலந்து கொள்ளலாம். அவ்வளவு நல்ல கெமிஸ்ட்ரி. அதிலும் ’புரொடக்‌ஷன் வேல்யூ’ போன்ற சினிமா மொழி ஜல்லிகளாக அடித்துத் தள்ளும் சார்லஸ் சுவாரசியமான கதாப்பத்திரம். ஹாலிவுட்டில் மட்டும் எப்படி இப்படி நடிகர்களை பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு சிறுவனின் கதாப்பாத்திரமும் நேர்த்தி.

மற்ற டெக்னிக்கல் விஷயங்களெல்லாம் எதிர்பார்த்த மாதிரியே சிறப்பு. இரயில் விபத்து காட்சிக்காகவே இன்னும் ஒன்றிரண்டு முறை பார்க்கலாம். அந்த காட்சியை திரையரங்கில் பார்த்தால் மட்டுமே அதன் பிரம்மாண்டத்தை உணர முடியும்.அருமையாக படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தின் இயக்குநர் மிஷன் இம்பாசிபிள் 3, ஸ்டார் டிரெக் போன்ற ஹிட் படங்களைக் கொடுத்த ஜே.ஜே.ஆப்ரம்ஸ். புகழ்பெற்ற (என்னளவில் மகா திராபையான) லாஸ்ட் தொலைக்காட்சித்தொடர் மற்றும் கிளோவர்ஃபீல்ட் படத்தின் தயாரிப்பளரும் இவரே. இப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்பீல்பெர்க். இருவருமே சிறு வயதில் Super 8 படங்கள் எடுத்து சினிமா கற்றுக்கொண்டவர்கள். ஸ்பீல்பெர்க்கின் தீவிர இரசிகரான ஆப்ரம்ஸ், ஸ்பீல்பெர்க் படங்களின் காட்சிகளை படம் நெடுக பயன்படுத்தியிருக்கிறார். படம் முடிந்த உடன் கிரெடிட்ஸையும் கண்டிப்பாக பார்க்கவேண்டும். சிறுவர்களின் குறும்படம் கிரெடிட்சின் போது வருகிறது. படத்தின்  கொஞ்சம் அதிகப்படியான செண்டிமெண்ட்டை தவிர்த்துப் பார்த்தால் நல்ல பொழுதுபோக்குப் படம். கண்டிப்பாக ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம்.


அந்த நாள் (1954)


எப்போதோ சிறு வயதில் பார்த்த படங்கள் சில, மனதில் தங்கிவிடும். முழுப்படமும் நினைவில் இல்லாவிட்டலும் சில காட்சிகள் அப்படியே நினைவில் இருக்கும். அப்படி என் நினைவில் தங்கிய படம், சன் டிவியிலோ டிடியிலோ பல வருடங்களுக்கு முன் பார்த்த ’அந்த நாள்’. இப்போது பர்ர்க்க முடிந்த போது இன்னும் அதிக பிரமிப்பை ஏற்படுத்தியது. ‘ரஷமோன்’ படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த வகையில் கதை சொல்பவன் நம்பகத்தன்மை அற்றவன் என்ற உத்தியை மட்டும் பயன்படுத்திக்கொண்டு மிகச் சிறப்பாக,ஸ்டைலாக படமாக்கியிருக்கிறார்கள். எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், பண்டரிபாய்,ஜாவர் சீதாராமன் முதலானோர் நடிப்பில் 1954 இல் வெளிவந்திருக்கிறது.

இரண்டாம் உலகப்போரின் போது சென்னையை ஜப்பான் இராணுவம் தாக்குகிறது.இந்தப் பிண்ணனியில் நடக்கும் ஒரு கொலையை காவல்துறை துப்பறிவதே கதை.முதல் காட்சியிலேயே ராஜன் (சிவாஜி கணேசன்) சுடப்பட்டு சுருண்டு விழ,சுடுபவர் கோணத்திலிருந்து நாம் பார்க்க,துப்பாக்கி சத்தத்தைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் பதறிப்போய் போலீசைத் தேடி அறக்க பறக்க ஓட,மிக சுவாரசியமாக துவங்குகிறது படம். கொலையை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி, ரேடியோ இஞ்சினியர் ராஜனின் மனைவி  உஷாவிடம் (பண்டரிபாய்) விசாரணை செய்துவிட்டு, குண்டுவீச்சின் களேபரத்தில் நடந்த ஒரு சராசரி குற்றம் தான் என்று வழக்கை முடிக்க நினைக்கிறார்.

முக்காப்பேண்டும் கோட்டு தொப்பியுமாக வலம் வரும் சிஐடி சிவானந்தமோ இது சாதாரண வழக்கில்லை என்று உணர்ந்து ராஜனை தெரிந்தவர்களான உஷா,தம்பி பட்டாபி,பட்டாபியின் மனைவி ஹேமா, ராஜனுடன் தொடர்புடைய  நாட்டியக்காரி அம்புஜம், பக்கத்து வீட்டுக்காரர் சின்னையா ஆகிய எல்லோரிடமும் விசாரிக்கிறார். ஒவ்வொருவரும் மற்ற ஒருவருக்கு ராஜனை கொலை செய்யும் நோக்கம் இருப்பதற்கான சம்பவத்தை சொல்கிறார்கள்.கண்டிப்பாக இவர்தான் கொன்றிருப்பார் என்று சந்தேகிப்பதுடன், கொலை எப்படி நடந்திருக்கலாம் என்றும் வர்ணிக்கிறார்கள். இந்த வர்ணனைகள் எந்த அளவு உண்மை என்று ஆராய்ந்து, கொலை நடந்த இடத்தில கிடைக்கும் தடயங்கள் உதவியுடன் யார் கொலை செய்திருப்பார் என்று சிஐடி சிவானந்தம் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது...அவ்வளவு முக்கியமில்லை.கொலைக்கான நோக்கம்,கொலையை சுற்றி அமைந்த சம்பவங்கள் அதைவிட இவற்றை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் இவைதான் சிறப்பு.ஒவ்வொருவர் விவரிக்கும் சம்பவங்கள் மூலமாக ராஜன் கதாப்பாத்திரத்தின் இயல்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுகிறது. கடைசியில் கொலை செய்யபடுமளவிற்கு என்ன செய்திருப்பார் என்று தெரியும்போது மேலோட்டமாக ஒரு சராசரி சம்பவமாக தோன்றும் ஒன்று, உண்மையில் எவ்வளவு முக்கியமான நிகழ்வாக இருந்திருக்கக் கூடும் என்று புலனாகிறது.
எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.குறிப்பாக சின்னையாவாக நடித்திருக்கும் பி.டி.சம்பந்தம் நன்றாக நடித்திருக்கிறார்.எல்லோரையும் தூக்கி சாப்பிடுவது வழக்கம்போல் சிவாஜி.கடைசி காட்சிகளில் எப்போதும் போல் அசர வைக்கிறார். ’பொய்,பித்தலாட்டம்..’ என்று தொடங்கும் வசனத்தை சிவாஜி பேசும் பாணி...ஒன்றும் சொல்வதற்கில்லை,நடிகன்!

தோய்வே இல்லாத விறுவிறுப்பான திரைக்கதை.படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை. பத்து பதினைந்து பாடல்களும் வைக்கும் காலத்தில் தைரியமாக பாடல்களே இல்லாமல் எடுத்திருக்கிறார்கள்.பிண்ணனி இசை ஒரளவு நன்றாகவே இருக்கிறது.காட்சியமைப்புகள் மற்றும் கேமரா கோணங்கள் இப்போது கூட புதுமைதான், படம் வந்த காலத்தில் புரட்சியாக கூட இருந்திருக்கலாம்.இப்போது கம்ப்யூட்டர் கேம்களில் அதிகம் காணப்படும் ஃபர்ஸ்ட் பர்சன் பாயிண்ட் ஆஃப் வியு கோணத்தில் பல காட்சிகள் முயற்சித்திருக்கிறார்கள்.ஒரு காட்சியில் கையில் சிகரெட்டும் உதடுகளிலிருந்து புகையுமாக சிவாஜி நிற்பதை சில்ஹவுட்டில் அருமையாக காட்சிப்படுத்திருப்பார்கள்.படம் நெடுக இப்படி பல புது முயற்சிகள்.படத்தின் காலத்தை கருத்தில் கொண்டால், இந்த முயற்சிகளெல்லாம் பிரமிக்க வைக்கின்றன.

பண்டரிபாயை முதல் முதலாக சிவாஜி சந்திக்கும் மாணவர் கூட்டம்,மாட்டு வண்டி மேல் சைக்கிள் மோதிய ’விபத்தை’ பைசல் பண்ண காவல் நிலையம் வரை செல்வது என்று 50களின் இயல்புகள் சுவாரசியம்.ஒவ்வோரு காட்சியாக சிலாகிக்க வேண்டுமென்றால், படம் முழுக்க பாராட்டிக்கொண்டிருக்கலாம். படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. அங்கங்கே லாஜிக் ஓட்டைகள், துப்பறியும் கதைகளுக்கே உரிய கொஞ்சம் செயற்கைத்தன்மை எல்லாம் இருக்கின்றன். இருந்தும் ஐம்பதுகளில் பாடல்களே இல்லாமல், இரண்டு மணி நேரப்படம் எடுத்திருக்கிறார்கள் என்பது கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய முயற்சி.எல்லாரும் பார்த்து இரசிக்கூடிய, சினிமா இரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.