Super 8 (2011)
Super 8 mm - அறுபதுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு படச் சுருள் வகை . அப்போதைய குறும்பட ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது இப்படச்சுருள் வகை. இன்று வரை Super 8 சுருளில் எடுக்கப்பட்ட படங்களுக்காக தனி விழாக்கள் இருக்கின்றன.ஸ்பீல்பெர்க் கூட சிறு வயதில் Super 8 படங்கள் எடுத்து தன் சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் தான்.
1970களில் பள்ளி விடுமுறை நாட்களில் Super 8 கேமராவைக்கொண்டு காவியம் படைக்க நினைக்கும் சிறுவர்களை சுற்றி நிகழும் சம்பவங்களைப் பற்றிய படம் Super 8. அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தின் ஒரு சிறிய ஊரில் வசிக்கும் ஜோ என்னும் சிறுவன், தன் தாயின் இழப்பிலிருந்து மனதை திசை திருப்ப, நண்பன் சார்ல்ஸ் எடுத்துக்கொண்டிருக்கும்
திகில் குறும்படத்தில் மேக்-அப் மேனாக ஈடுபடுகிறான்.சார்லஸ்,தன் திரைக்கதையில் ஒரு கதாநாயகி பாத்திரத்தை நுழைத்து அந்த வேடத்திற்கு பள்ளியில் உடன் படிக்கும் ஆலிஸையும் நடிக்க சம்மதிக்க வைத்துவிடுகிறான். திட்டமிட்டபடி ஜோ, சார்லஸ், ஆலிஸ் மற்றும் அவர்களின் நண்பர்கள் அந்த ஊரின் சிறு இரயில் நிலையத்தில் படம் எடுத்துக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக அங்கு நடக்கும் ஒரு பெரும் இரயில் விபத்தை கேமராவில் பதிவு செய்ய நேர்கிறது.விமானப்படைத்தளபதியிடம் சிக்கிக்கொள்ள,அவர்களிடமிருந்து தப்பி எப்படி பிரச்சினையை தீர்க்கிறார்கள் என்பதே கதை.
குடும்பத்தில் ஏற்ப்பட்ட இழப்பை எதிர்கொள்ள முடியாமல் விரிசலடையும் ஜோவுக்கும்,ஜாக்ஸனுக்குமான் உறவு,ஜோவுக்கும் ஆலிஸுக்கும் இடையில் துளிர்க்கும் மெல்லிய காதல் என உயிரோட்டமான பின்னணியில் கொஞ்சம் அதிரடியான படமாக எடுத்திருக்கிறார்கள்.போகப்போக நிறைய செண்டிமெண்ட் கலந்து சராசரி தமிழ் மசாலாவாக ஆவது கொடுமை.அதிலும் படத்தின் முடிவில் கொஞ்சம் ஓவர் டோஸாகவே. அருமையான முதல் பாதிக்காக பொறுத்தருள்வோமாக.
சிறுவர்கள் அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.எல்லாரும் மானாட மயிலாடவில் கலந்து கொள்ளலாம். அவ்வளவு நல்ல கெமிஸ்ட்ரி. அதிலும் ’புரொடக்ஷன் வேல்யூ’ போன்ற சினிமா மொழி ஜல்லிகளாக அடித்துத் தள்ளும் சார்லஸ் சுவாரசியமான கதாப்பத்திரம். ஹாலிவுட்டில் மட்டும் எப்படி இப்படி நடிகர்களை பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு சிறுவனின் கதாப்பாத்திரமும் நேர்த்தி.
மற்ற டெக்னிக்கல் விஷயங்களெல்லாம் எதிர்பார்த்த மாதிரியே சிறப்பு. இரயில் விபத்து காட்சிக்காகவே இன்னும் ஒன்றிரண்டு முறை பார்க்கலாம். அந்த காட்சியை திரையரங்கில் பார்த்தால் மட்டுமே அதன் பிரம்மாண்டத்தை உணர முடியும்.அருமையாக படமாக்கியிருக்கிறார்கள்.
படத்தின் இயக்குநர் மிஷன் இம்பாசிபிள் 3, ஸ்டார் டிரெக் போன்ற ஹிட் படங்களைக் கொடுத்த ஜே.ஜே.ஆப்ரம்ஸ். புகழ்பெற்ற (என்னளவில் மகா திராபையான) லாஸ்ட் தொலைக்காட்சித்தொடர் மற்றும் கிளோவர்ஃபீல்ட் படத்தின் தயாரிப்பளரும் இவரே. இப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்பீல்பெர்க். இருவருமே சிறு வயதில் Super 8 படங்கள் எடுத்து சினிமா கற்றுக்கொண்டவர்கள். ஸ்பீல்பெர்க்கின் தீவிர இரசிகரான ஆப்ரம்ஸ், ஸ்பீல்பெர்க் படங்களின் காட்சிகளை படம் நெடுக பயன்படுத்தியிருக்கிறார். படம் முடிந்த உடன் கிரெடிட்ஸையும் கண்டிப்பாக பார்க்கவேண்டும். சிறுவர்களின் குறும்படம் கிரெடிட்சின் போது வருகிறது. படத்தின் கொஞ்சம் அதிகப்படியான செண்டிமெண்ட்டை தவிர்த்துப் பார்த்தால் நல்ல பொழுதுபோக்குப் படம். கண்டிப்பாக ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம்.


